கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம்

கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூருவில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடகா : மே-17

கர்நாடகத்தில், ஆட்சியமைப்பதற்கு தேவையான எம்.எல்.ஏ.க்களை பெற்றுள்ள காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணிக்குப் பதிலாக பா.ஜ.க.வின் எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆளுநர் வாஜூபாய் வாலாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவைக் கட்டடமான விதான் சவுதா வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே அசோக் கெலாட் உள்ளிடோர் கலந்துகொண்டனர். மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா, அவரது மகனும், கட்சியின் மாநில தலைவருமான குமாரசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, அரசியலமைப்புக்கு எதிராக பாஜக செயல்படுவதை மக்களிடம் எடுத்து கூறுவோம் என்று தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது என்று குற்றம்சாட்டினார்.

பின்னர், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் அனைவதும் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருப்பதால், எம்எல்ஏக்களை பாதுகாக்கும் பணிகளில் காங்கிரஸ் கட்சியும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் ஈடுபட்டுள்ளது.

Related Posts