கறுப்புப் பட்டியலில் சேர்க்க நேரிடும்:பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி பணிக்குழு எச்சரிக்கை

தீவிரவாதத்திற்கு எதிராக வரும் அக்டோபருக்குள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் கறுப்புப் பட்டியலில் சேர்க்க நேரிடும் என பாகிஸ்தானை சர்வதேச நிதி நடவடிக்கைக்கான பணிக்குழு எச்சரித்துள்ளது.

 

சர்வதேச அளவில் தீவிரவாத நிதியாதாரங்களை கண்காணித்து தடுக்கும் , எஃப்ஏடிஎஃப் எனப்படும் பணிக்குழுவின் கூட்டம், அமெரிக்காவின் ஆர்லாண்டோ நகரில் கடந்த 16ஆம் தேதி தொடங்கி நேற்று நிறைவு பெற்றது.

 

இந்தக்  கூட்டத்தில், தீவிரவாத நிதித் தடுப்பு நடவடிக்கைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

பணமோசடி மற்றும் தீவிரவாத நிதியைத் தடுக்கும் வகையில் போதிய சட்டங்கள் இல்லை என்ற அடிப்படையில்,கடந்த ஜூனில், பாகிஸ்தான் நாடு கிரே பட்டியலில் வைக்கப்பட்டது.

கிரே பட்டியலில் சேர்க்கப்பட்டதால், ஆண்டுக்கு 10 பில்லியன் டாலர்கள் அளவுக்கு நிதி பாதிப்புகளை பாகிஸ்தான் சந்திக்க நேரிட்டுள்ளதாக கடந்த ஏப்ரலில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கூறியிருந்தார். மேலும்,தீவிரவாதிகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக 10 அம்ச செயல் திட்டம் பாகிஸ்தானுக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. இதை நிறைவேற்ற கடந்த ஜனவரி வரையிலும், பின்னர் மே மாதம் வரையிலும் பாகிஸ்தானுக்கு கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் கெடு முடிந்த பிறகும் பாகிஸ்தான்10 அம்ச செயல் திட்டத்தை நிறைவேற்றாத நிலையில், அந்நாட்டை கறுப்பு பட்டியலில் சேர்ப்பது குறித்து சர்வதேச நிதி நடவடிக்கைக்கான பணிக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.  நிதி நுண்ணறிவுப் பிரிவின் தலைவர் பி.கே.மிஸ்ரா தலைமையிலான இந்திய குழு, பாகிஸ்தானை கறுப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியதோடு, அதற்கான புதிய ஆதாரங்களையும் வழங்கியது. 3 நாடுகளின் ஆதரவு இருந்தால் கறுப்பு பட்டியலில் சேர்ப்பதை தவிர்த்துவிடலாம் என்ற நிலையில், சீனா, துருக்கி, மலேசியாவின் உதவியுடன் இந்த முறை நடவடிக்கையில் இருந்து பாகிஸ்தான் தப்பியுள்ளது. இருப்பினும், தீவிரவாதத்திற்கு எதிராக வரும் அக்டோபருக்குள் உரிய நடவடிக்கைகள் எடுக்கத் தவறினால் கறுப்புப் பட்டியலில் சேர்க்க நேரிடும் என பாகிஸ்தானை சர்வதேச நிதி நடவடிக்கைக்கான பணிக்குழு எச்சரித்துள்ளது.

Related Posts