கலை, அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்லைனில் கலந்தாய்வு

பொறியியல், மருத்துவ படிப்புகளுக்கு நடப்பது போன்று இனி கலை, அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்லைனில் கலந்தாய்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கலை அறிவியலை பொறுத்தவரையில் அந்தந்த கல்லூரிகள் தனித்தனியாக அவர்களுக்கான இடங்களை நிரப்பி கொள்வதற்கான கலந்தாய்வுகள் நடத்துகின்றன. ஒருசில கல்லூரிகளில் கலந்தாய்வு நடத்தும் முறை கூட இல்லாமல் மாணவர்களை நேரடியாக சேர்க்கப்படுகின்றனர். முக்கியமாக கலை, அறிவியல் படிப்புகளை பொறுத்தவரையில் ஒவ்வாரு கல்லூரிக்கும் மாணவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். ஒன்று அல்லது இரண்டு கல்லூரிகளில் விண்ணப்பித்து, இடம் கிடைக்காமல் ஏமாந்த மாணவர்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் தமிழக உயர்கல்வித் துறையின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம், தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், உயர்கல்வித் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு கவுன்சிலிங் நடத்துவதைப்போன்று கலை அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடத்தி மாணவர்களை சேர்க்க இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி அடுத்த ஆண்டு முதல் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

Related Posts