கல்லூரி மாணவர்களுக்கான பெரியார்- அண்ணா நிறைவுப் பேச்சுப் போட்டியில் திரளானோர் பங்கேற்க வேண்டும்: வைகோ

சென்னையில் வரும் 2-ந் தேதி நடைபெறும் கல்லூரி மாணவர்களுக்கான பெரியார்- அண்ணா நிறைவுப் பேச்சுப் போட்டியில் திரளானோர் பங்கேற்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட இயக்கம் இம்மண்ணில் விதையாக விழுந்து, விருட்சமாக வளர்வதற்கு ஆதார சுருதியாக இருந்த தந்தை பெரியாருடன் கை கோர்த்து, சாமானியனுக்கு வாய்க்காத அதிகார அரசியலை எளியவர்க்கு வழங்கி தமிழர் ஏற்றம் பெற மாற்றம் கண்ட வித்தகத் தலைவர் பேரறிஞர் அண்ணா என கூறியுள்ளார்.  திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக, புத்தியக்கங்கள் எனும் பெயரில் போலிகள் புறப்பட்டு வரும் காலத்தில், அடிமை மோகத்தில் இருந்து தமிழரை மீட்டெடுக்க,  மானமும், அறிவும் மனிதனுக்குத் தேவை என்று தடி உயர்த்தியவர் பெரியார் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார். இந்தி ஆதிக்கத்தின் பிடியிலிருந்து தமிழ் மொழியை மட்டுமின்றி, தாய்த் தமிழரையும் மீட்டெடுத்து கோட்டை முற்றத்தில் திராவிட இயக்கக் கொடி பறக்க விட்டவர் அண்ணா  என அவர் புகழாரம் சூட்டியுள்ளார். அத்தகைய தகைமைக்குரிய பெரியார், அண்ணா வரலாற்றை இளைய தலைமுறை கற்றுத் தெளியவும், ஈரோட்டில் செப்டம்பர் 15-ல் நடைபெறும், மதிமுகவின் முப்பெரும் விழா மாநில மாநாட்டை முன்னிட்டும், கல்லூரி மாணவர்களுக்கான பெரியார்-அண்ணா பேச்சுப் போட்டி  நடத்தப்படும் என மதிமுக மாணவர் அணி அறிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.  இதன்படி கடந்த  ஜீலை மாதம் 22-ந் தேதி நாற்பது மாவட்டங்களில் நடைபெற்ற மாவட்டப் போட்டிகளில் ஆயிரத்த 500 கல்லூரிகளைச் சேர்ந்த 2ஆயிரத்து200 மாணவர்கள் பங்கேற்றதாகவும், மாவட்ட அளவில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவர்களுக்கு முறையே 6 ஆயிரம்,  4 ஆயிரம்,  2 ஆயிரம் ரூபாய் என பரிசுகள் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  இதனை தொடர்ந்து  ஆகஸ்ட் 19-ந் தேதி தமிழகத்தை ஏழு மண்டலங்களாகப் பிரித்து 120 மாணவர்கள் பங்கேற்ற மண்டலப் போட்டி நடைபெற்றதாகவும், இப்போட்டியில் முதல் மூன்று இடங்களை வென்ற மூவருக்கு முறையே 10 ஆயிரம், 7 ஆயிரம், 5 ஆயிரம் ரூபாய் என பரிசுத் தொகை வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 2-ந் தேதி சென்னை-புரசைவாக்கம், கம்மவார் திருமண மண்டபத்தில் காலை 9 மணிக்கு நிறைவுப் போட்டி நடைபெற உள்ளது எனவும், இதில், மண்டலப் போட்டியில் வெற்றி பெற்ற 21 மாணவர்கள் பங்கேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ‘

இதில் வெற்றி பெறுபவர்களுக்கு அன்றைய தினமே முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் மற்றும் பெரியார்-அண்ணா முகம் பதித்த தங்கப் பதக்கமும், இரண்டாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய் மற்றும் பெரியார்-அண்ணா முகம் பதித்த வெள்ளிப் பதக்கமும், மூன்றாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாய் மற்றும் பெரியார்-அண்ணா முகம் பதித்த வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவுப் போட்டி மற்றும் மாலையில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் தானும்,  கட்சி முன்னணியினரும் பங்கேற்க உள்ளதாகவும், இதில் மதிமுக தோழர்கள் பெருமளவில் பங்கேற்குமாறு பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

Related Posts