கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்: கனிமொழி எம்.பி.

 

 

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றினால்தான், நீட் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள விளக்குடி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி, மகனின் நீட் தேர்வுக்காக எர்ணாகுளம் சென்று விடுதியில் தங்கியிருந்தார். நேற்று காலை மகனை நீட் தேர்வு மையத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு அறைக்கு திரும்பிய கிருஷ்ணசாமி மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது உடலை சொந்த ஊர் கொண்டு வர அரசின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கிருஷ்ணசாமியின் உடல், இன்று அதிகாலை அவரது சொந்த ஊரான விளக்குடி கிராமத்துக்கு வந்தடைந்தது. அங்கு அவரது  உடலை பார்த்து கிருஷ்ணசாமியின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். கிருஷ்ணசாமியின் உடலுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ், திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கிருஷ்ணசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி கூறியதாவது ;-

நீட் தேர்வெழுத சரியான மையங்களைக் கூட சிபிஎஸ்இ அமைக்கவில்லை. மாணவர்கள், பெற்றோரை தவிக்கவிடும் நீட் தேர்வு அவசியமா? என்பதை அரசு சிந்திக்க வேண்டும்.

மத்திய அரசு தமிழக மாணவர்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. மரணமடைந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் என்ன பதில் சொல்ல முடியும்? எது சரியான உடை என்பது அணிபவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

ஆனால், மாணவிகளின் உடை மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், மாணவிகள் மிகுந்த அவமானத்திற்கு ஆளாகியுள்ளனர். கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றுவதே சரியான தீர்வு. இல்லையென்றால், இத்தகைய பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இவ்வாறு கனிமொழி கூறினார்.

Related Posts