கல்வி தொலைக்காட்சியை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

கல்வி தொலைக்காட்சியை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

மாணவர்களின் கல்வி மேம்பாட்டை கருத்தில் கொண்டு தமிழக அரசு கல்வி தொலைக்காட்சி சேவையை தொடங்கியுள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேவையை தொடங்கி வைத்தார்.

விழாவில் பேசிய அவர், கல்வி கற்பதன் மூலமே மனித வாழ்வு முழுமை அடைகிறது என்றார். மனிதனுக்கு கல்வியைத் தவிர சிறந்த துணை வேறு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். வீட்டில் டிவி பார்க்கும் மாணவர்கள் சரியாக படிப்பது இல்லை என்ற நிலை இனி மாறும் எனவும் முதலமைச்சர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அறிவுத்தேடலை மேலும் விரிவாக்க மனிதன் பயன்படுத்திய கருவி தான் கல்வி என்றார். அறிவுக் குழந்தையை உருவாக்குவதை விட சிந்திக்கும் குழந்தையை உருவாக்குவதே பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய பங்கு என்று அவர் கூறினார். கல்வி என்பது தகவலை திணிப்பதாக இல்லாமல் வாழ்க்கையை முன்னேற செய்வதாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

நாடே வியக்கும் அளவிற்கு, தமிழகத்தில் தான், முதன் முதலாக, கல்விக்கு தொலைக்காட்சி உருவாக்கி வரலாறு படைக்கப்பட்டுள்ளது என்று நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கல்வித் தொலைக்காட்சியின் மூலம் கல்வித்துறையில் மிகப்பெரிய அளவில் புரட்சி ஏற்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தெரிவித்துள்ளார்.

கின்னஸ் போன்று உலக சாதனைகளை அங்கீகரிக்கும் அமைப்பான “Unique World Record “சார்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு உலக சாதனைக்கான விருது வழங்கப்பட்டது. உலக அளவில் கல்விக்கென பிரத்யேகமாக தமிழில் தொடங்கப்பட்ட முதல் தொலைக்காட்சி என்பதற்காக இந்த விருதும், அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. Unique world record நிறுவனத்தின் தலைமை தீர்ப்பாளர் ரகுமான் இந்த விருதினை வழங்கினார். 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் கல்வி தொலைக்காட்சியை அரசு கேபிள் டி.வி.யில் சேனல் எண்.200-ல் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts