காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் 100% வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்நடத்தப்படும்:  சித்தராமையா 

கர்நாடகா மாநிலத்தில் மக்களவைத் தேர்தல்  ஏப்ரல் 18 மற்றும் ஏப்ரல் 23 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அனைத்து கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் பிரசாரம், செய்தியாளர்கள் சந்திப்பு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.  தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல் அமைச்சர், மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சித்தராமையா   செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது,தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உறுதியானவை அல்ல எனவும்,விவிபேடுகளிலும் கோளாறுகள் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறினார்.  நாட்டின் பல்வேறு கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து புகார் கொடுத்துள்ளன எனவும், ஆனால், தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுவதாகவும் அவர் புகார் கூறினார்.  நெதர்லாந்து, அயர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் வாக்களிப்பதில் நம்பிக்கை,  பாதுகாப்பு மற்றும் வாக்குகளின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு வாக்குப்பதிவு இயந்திரங்களை கைவிட்டு, பழைய வாக்குச்சீட்டு முறைக்கே  மீண்டும் மாறிவிட்டதாக அவர் தெரிவித்தார்.   கடந்த 2014ம் ஆண்டு  தேர்தலிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்த்தாக கூறிய அவர்  இந்த தேர்தலிலும் மோசடி நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். இந்திய அரசியலமைப்பு சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலையே வலியுறுத்துகிறது எனவும்,  மேலும் தேர்தல் ஆணையம் நேர்மையுடனும், பாரபட்சம் இன்றியும் செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.  பாஜகவிற்கு மக்கள் நிச்சயம் நல்ல பாடத்தை இந்த தேர்தலில் புகட்டுவார்கள் எனவும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறை 100 சதவீதம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் சித்தராமையா தெரிவித்தார்.

Related Posts