காஞ்சிபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு, பாதுகாப்பாக செயலிழப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் மானாம்பதி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு, பாதுகாப்பாக செயலிழப்பு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மானாம்பதி பகுதி கங்கை அம்மன் கோயில் குளத்தை தூய்மைப்படுத்தும் பணியில், இளைஞர்கள் சிலர் ஈடுபட்டனர். அப்போது, கிடைத்த ஒரு பொருளை பிரித்து பார்த்துவிட்டு வீசியபோது, அது வெடித்ததில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். போலீஸ் விசாரணையில் அது ராக்கெட் லாஞ்சரின் முன்பகுதி என தெரிய வந்தது. இதேபோல் மேலும் ஒரு குண்டு கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அடுத்த நாளே, அனுமந்தபுரம் ஏரியில் வெடிகுண்டு குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. இதை அங்கு மாடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து ராணுவ அதிகாரிகள் மற்றும் மறைமலைநகர், செங்கல்பட்டு தாலுகா போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், கைப்பற்றபட்ட ராக்கெட் லாஞ்சர் வெடிகுண்டை பாதுகாப்புடன் வெடிக்க வைத்து செயலிழக்க வைக்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கு செங்கல்பட்டு நீதிபதி அனுமதியளித்த நிலையில், ஏரியில் 5 அடி பள்ளம் தோண்டப்பட்டது. பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் வெடிகுண்டின் பக்கவாட்டில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு ரிமோட் மூலம் குண்டு வெடிக்க வைக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை மற்றும் காஞ்சிபுரம் வெடிகுண்டு நிபுணர்கள் இணைந்து, வெடிகுண்டை வெடிக்க வைத்து பாதுகாப்பான முறையில் செயலிழக்க செய்தனர்.

Related Posts