காட்பாடியில் 11 கோடி ரூபாய் சிக்கிய விவகாரத்தில், கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு

வேலூரை அடுத்த பள்ளிக்குப்பத்தில் உள்ள சிமெண்ட் கிடங்கில் இருந்து கட்டுக் கட்டாக கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக கடந்த ஒன்றாம் தேதி அன்று, வருமான வரித்துறை தெரிவித்து இருந்தது. அந்த ரூபாய் நோட்டு பண்டல்கள் மீது வார்டுகளின் பெயர்கள் அச்சிடப்பட்டு இருந்தன.இதைத் தொடர்ந்து வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் கல்லூரி மற்றும் திமுக பிரமுகர்கள் சிலருக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் மொத்தமாக 11 கோடியே 63 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம், வருமான வரித்துறை  அளித்திருந்த அறிக்கையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யுமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி, வேலூர்மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் , வேலூர் மாநகர திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசன், சிமெண்ட் குடோனுக்குச் சொந்தக்காரரான தாமோதரன் ஆகியோர் மீது காட்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். லஞ்சம் கொடுக்க முயற்சித்தல், குறிப்பிட்ட செயலை பணம் கொடுத்து நடத்த முயல்வது ஆகிய இரு பிரிவுகளில் சீனிவாசன் மற்றும் தாமோதரன் மீதும், தவறான பிரமாண பத்திரம் தாக்கல் செய்தல் என்ற மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவின்கீழ் கதிர் ஆனந்த் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Posts