காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் பரிசுத்தொகை வழங்கினார்

 

 

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு தெரிவித்தார். 

சென்னை, ஏப்ரல்-24 

21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் 11 பதக்கங்களை கைப்பற்றி நாட்டுக்கு பெருமை சேர்த்தனர். பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு அரசு சார்பில் ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த வீரர்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ஆடவருக்கான பளு தூக்குதலில் தங்கம் வென்ற சதீஷ் குமாருக்கு 50 லட்சமும், டேபிள் டென்னிசில் பதக்கம் வென்ற சரத்கமல், சத்தியன் ஆகியோருக்கு தலா 50 லட்ச ரூபாயும், முதலமைச்சர் வழங்கினார். ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா பல்லிகல் கார்த்திக்குக்கு 60 லட்ச ரூபாய் ஊக்கத்தொகையையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதேபோல், ஸ்குவாஷ் போட்டியில் பதக்கம் வென்ற சவுரவ் கோஷலுக்கு தலா 30 லட்ச ரூபாய் ஊக்கத்தொகையை முதலமைச்சர் வழங்கி பாராட்டினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வீரர், வீராங்கனைகள், ஊக்கத்தொகை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

Related Posts