காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் கிராம நிர்வாக அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்: வைகோ

காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் கிராம நிர்வாக அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பணிபுரியும் ஏழாயிரத்துக்கு மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 28 ஆம் தேதி முதல் போராடி வருவதாகவும், மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.கிராம நிர்வாக அலுவலர்களின் பணி பொதுமக்களோடு நேரடித் தொடர்புள்ள இன்றியமையாத பணி எனவும்,  கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் முன் வைத்துள்ள கோரிக்கைகள் மிகச் சாதாரணமானவை எனவும் அவர் கூறியுள்ளார். அரசு நிர்வாகத்துறை முற்றிலும் கணினி மயமாகி வரும் சூழலில் கிராம நிர்வாக அலுவலர்கள் கணினி மற்றும் இணையதள வசதி அரசின் சார்பில், வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது எனவும், கிராம நிர்வாக அலுவலர்களால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் அனைத்தும் இணையதளம் மூலம் அளிக்கப்படுவதால், அதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவது அரசின் பொறுப்பாகும்எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  மேலும், கிராம நிர்வாக அலுவலர்களாக 50 விழுக்காடு பெண்கள் பணிபுரிவதால், அவரவர் சொந்த மாவட்டத்தில் பணிபுரிய மாவட்ட மாறுதல் கோரி வருகின்றனர் எனவும்,  கிராம நிர்வாக அலுவலர்களின் அலுவலகங்களில் மின்வசதி,கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி வேண்டும் என்ற கோரிக்கையும் அரசால் நிறைவேற்ற முடியாதது அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை கூடுதலாக கவனிக்க வேண்டி இருப்பதால், கிராம நிர்வாக அலுவர்களின் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். எனவே தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, கிராம நிர்வாக அலுவலர்களின் கோரிக்கைளை நிறைவேற்ற முன்வரவேண்டும் எனவும் பொதுமக்களின் நலனைக் கருதி அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Related Posts