காவல்துறையை கண்டித்து தூத்துக்குடியில் முழு அடைப்பு

தூத்துக்குடியில் காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. காவல்துறையின் அத்துமீறிய செயலைக் கண்டித்து அங்கு கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் முழு அடைப்பு போல காட்சியளிக்கிறது.

தூத்துக்குடி : மே-23

தூத்துக்குடி மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்,  ஜெயராமன், தமிழரசன், கந்தையா, மணிராஜ், கிளஸ்டன், வெனிஸ்டா, சண்முகம், அந்தோணி. கார்த்திக் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வன்முறையில் காயமடைந்த 20 காவல்துறையினரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டை கண்டித்து, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மருந்துக் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. மற்றபடி அனைத்து கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. பேருந்துகள் ஆட்டோக்கள், டாக்சிக்கள் இயக்கப்படாததால், தூத்துக்குடி நகர சாலைகள் முழு அடைப்பு போல வெறிச்சோடி காணப்படுகின்றன. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் கூட்டமாக நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி முழுவதும் காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் வரும் 25 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீடிக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரம் காவல்துறையினர் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Posts