காவல்துறை கண்காணிப்பாளர் மீது தவறில்லை:கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

சபரிமலைக்கு சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்ததில் காவல்துறை கண்காணிப்பாளர் மீது தவறில்லை என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துபாஜக மற்றும் இந்து அமைப்புகள் சபரிமலையில் போராட்டத்தில் ஈடுபட்டன. சபரிமலையில் நடந்த போராட்டம் காரணமாக இதுவரை எந்த இளம்பெண்ணும் அங்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியவில்லை.

போராட்டத்தையொட்டி சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக நிலக்கல் வரை மட்டுமே பக்தர்களின் வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. அங்கிருந்து பேருந்தில் தான் பக்தர்கள் பம்பை செல்ல வேண்டும். இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இருமுடி கட்டி தனது ஆதரவாளர்களுடன் காரில் சபரிமலைக்கு சென்றார். அப்போது நிலக்கல்லில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் கண்காணிப்பாளர் யதீஷ் சந்திரா, அவரது காரை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. முக்கிய பிரமுகர் என்ற முறையில் மத்திய அமைச்சரின் காரை மட்டும்தான் அனுமதிக்க முடியும் என்று கூறியதால் பொன். ராதாகிருஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன் பேருந்தில் பம்பைக்கு பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது.மேலும் சபரிமலையில் சாமி தரிசனம் செய்து விட்டு பொன். ராதாகிருஷ்ணன், திரும்பியபோதும் அவரது காரை தடுத்து காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்து, குமரி மாவட்டத்தில் நேற்று பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனிடையே திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயன்,  சபரிமலையில் பாதுகாப்பு பணியை காவல்துறையினர் சிறப்பாக செய்து வருகின்றனர் எனவும், சபரிமலை சென்ற மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம் போலீஸ் சூப்பிரண்டு யதீஷ் சந்திரா அவமரியாதையாக நடக்கவில்லை எனவும் தெரிவித்தார். தன்னுடன் வந்த அனைத்து வாகனங்களையும் பம்பைக்கு அனுமதிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் வலியுறுத்தியதால்தான் அவருடன் காவல்துறையினர்வாக்குவாதத்தில் ஈடுபடும் நிலை உருவானதாகவும், காவல்துறையினர் நடந்து கொண்டதில் தவறில்லை எனவும் அவர் கூறினார்.

Related Posts