காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக அரசு அறிக்கை தாக்கல்

 

 

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. கடந்த 3-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், மே மாதத்துக்குள் தமிழகத்துக்கு கர்நாடக அரசு 4 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று ஆணையிட்டது. இந்நிலையில், காவிரி வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், கர்நாடக அரசு சார்பில் இன்று அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கடந்த பருவமழை காலத்தில் கர்நாடகத்தில் போதிய அளவு மழை பெய்யாததால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த ஏப்ரல் மாதம் வரை தமிழகத்திற்கு 116 புள்ளி ஏழு நான்கு டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட்டுள்ளதாக கர்நாடக அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தற்போது தங்களது தேவைக்கு மட்டுமே காவிரியில் தண்ணீர் இருப்பதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக அரசு தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெங்களூருவிற்கு வழங்குவதற்கு கூடுதல் தண்ணீர் தேவைப்படுவதால், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை எடுத்துக் கொண்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அரசு தாக்கல் செய்த அறிக்கை நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Posts