காவிரி அமைப்பின் தலைமையகம் டெல்லியில் இருக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், மேலாண்மை வாரியத்தின் அனுமதியில்லாமல் எந்த மாநிலமும் புதிய அணைகள் கட்ட முடியாது என நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர்.

டெல்லி : மே-16

உச்சநீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை அமைக்க கோரிய வழக்கு நேற்று முன் தினம் விசாரணக்கு வந்தபோது, காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையை சம்பந்தப்பட்ட 4 மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்றும், அதில் உள்ள நிறை, குறைகளை மாநில அரசுகள் தெரிவிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரில் திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசும், மத்திய அரசும் ஒப்புதல் தெரிவித்தது. இதேபோல், காவிரி நீர் திறக்கும் அனுமதியை வாரியத்திடம் இருந்து பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு, மேலாண்மை வாரியம் பெங்களூருவில் அமைக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், காவிரி நீர் திறக்கும் உரிமையை மேலாண்மை வாரியத்திடம் இருந்துதான் பெற வேண்டும் என வலியுறுத்தியது. பின்னர், இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், காவிரி விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு மட்டுமே உண்டு என்று தெரிவித்தனர். இதில், மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், நீர்ப் பங்கீடு தொடர்பாக மத்திய அரசை காவிரி அமைப்பு அணுகத் தேவையில்லை என்றும், காவிரி மேலாண்மை வாரியத்தின் முடிவே இறுதியானது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். காவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதியில்லாமல், தமிழக அரசோ, கர்நாடக அரசோ புதிய அணைகளை கட்ட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதன்பின்னர், திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

Related Posts