காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் மக்கள் போராட்டம் எரிமலை போல் வெடிக்கும்:   வைகோ 

இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் , தமிழகத்தின் உயிராதாரமான காவிரி படுகை மாவட்டங்களில் வேளாண்மைத் தொழிலை முற்றிலும் அழித்து ஒழித்துவிட்டு, இலட்சக்கணக்கான மக்களை ஏதிலிகளாக புலம் பெயரச் செய்வதற்கு நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசும், அதற்கு வெண்சாமரம் வீசும் எடப்பாடி பழனிச்சாமி அரசும் சதித் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்து இருப்பதாக அவர்  குற்றஞ்சாற்றியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், சோழ நாடு சோறுடைத்து என்ற பெருமை பெற்றிருக்கும் நெற்களஞ்சியமான காவிரி பாசனப் பகுதி மக்களை சோற்றுக்கு கை ஏந்தும் நிலைக்குத் தள்ளிவிட முயல்வதாக கூறியுள்ள அவர்,  மோடி அரசு மூர்க்கத்தனமாக மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறைப் படிம எரிவாயு போன்ற நாசகாரத் திட்டங்களைச் செயல்படுத்த முனைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

அதன் மூலம், மோடி அரசுக்குக் காவடி தூக்கும் கையாலாகாத எடப்பாடி அரசு, காவிரி டெல்டா மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் துரோகம் இழைத்து வருவருவதாக  வைகோ சாடியுள்ளார் .

இதற்கிடையே, காவிரி பாசனப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தினால் தமிழகத்தின் வேளாண்மை இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்பதால் கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளும், பொதுமக்களும் போராடி வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ள அவர், 2017 பிப்ரவரி 15 இல் பிரதமர் மோடி தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, இந்தியாவில் 8 கடற் பகுதிகள் அடங்கிய  31 வட்டாரங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் வழங்கும் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும், ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த ‘நெல்ப்’ எனப்படும் உரிமம் வழங்கும் திட்டத்தை மாற்றி, ‘ஹெல்ப்’ எனும் ஒற்றை உரிமம் வழங்கும் திட்டத்தை பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ளதாகவும்,  இதன்படி புதைபடிவ எரிபொருளான மீத்தேன், ஷேல்,ஹைட்ரோ கார்பன் மற்றும் நீர்ம உரிவாயு உள்ளிட்ட எந்த வகையாக இருந்தாலும், உரிமம் பெற்ற நிறுவனங்கள் பூமிக்கு அடியிலிருந்து எடுத்துக்கொள்ளலாம் என்றும் தனித் தனியாக உரிமங்கள் பெறத் தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கி உள்ளதகாவும் அவர் குற்றச்சாட்டியுள்ளார்.

.

இத்திட்டத்தில் தமிழகத்தில் 3 வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்றும், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்ட்த்திலு உள்ள தியாகவல்லி முதல் நாகை மாவட்டம் சீர்காழி வரையில் உள்ள வட்டாரத்தில் 731 சதுர கி.மீ. தூரமும், .

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் முதல் கடலூர் மாவட்டம் வரையிலான கடல் பகுதி வட்டாரத்தில் 1794 சதுர கி.மீ. தூரமும்,   , கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை முதல் நாகை மாவட்டம் புஷ்பவனம் வரையில் 2674 சதுர கி.மீ. தூரமும், ஹைட்ரோ கார்பன் ஆய்வு நடத்த வேதாந்தா குழுமத்திற்கும் மத்திய அரசு உரிமம் வழங்கி இருக்கிறது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், மத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி. நிறுவனமும், வேதாந்தா குழுமமும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வு நடத்த மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை மே 10 ஆம் தேதி அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளதுஎன்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர், நீரியல் விரிசல் முறையில் 10 ஆயிரம் மீட்டருக்கும் கீழே பூமிக்குள் ஆழமாக துளையிடப்பட்டு, பின்னர் அங்கிருந்து பக்கவாட்டில் 2 கிலோ மீட்டர் வரை எல்லா பக்கங்களிலும் துளை போடப்படும் என்றும் , அதன் காரணமாக  பூமியின் மேலிருந்து மிகுந்த அழுத்தத்தில் வேதி நுண்துகள்கள் கலந்த நீர் துளைக்குள் செலுத்தும்போது பக்கவாட்டுத் துளைகளில் செல்லும் நீர் விரிசல்களை உண்டாக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 மேலும் அவர், அந்த விரிசல்கள் வழியே பூமிக்கடியில் அடைபட்டுக் கிடக்கும் எரிவாயு ஒன்றைக் கலக்கும் என்றும், இதனால் வளம் கொழிக்கும் காவிரி பாசனப் பகுதியின் நிலங்களில் நீர் வளம் பாதிக்கப்படும் என்றும், கடல்நீர் உட்புகும் ஆபத்து நேரும்என்பதால், விளை நிலங்கள் பாழாகி பயிர் சாகுபடி செய்ய முடியாத பேராபத்து உருவாகி,  இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும் என்றும், சொந்த மண்ணிலேயே நிலங்களைப் பறிகொடுத்துவிட்டு ஏதிலிகளாக அலையும் கொடுமைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள் என்றும் அவர் குற்றச்சாட்டியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் வைகோ, வேளாண்மையை அழித்து பல இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பலிகொடுத்து, இந்திய அரசு ஹைட்ரோ கார்பன் மூலம் பல இலட்சம் கோடிகளைக் குவிப்பதற்கும், பெரு நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்கும் தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலை மூலம் இலட்சக்கணக்கான மக்களை வாழ முடியாத நிலைமைக்குத் தள்ளி கொடுமை புரிந்த வேதாந்தா குழுமத்திற்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்களைச் சுட்டுக்கொன்று 13 பேர் உயிரைப் பறித்த எடப்பாடி பழனிச்சாமி அரசு, என்ன துணிச்சலில் அதே வேதாந்தா குழுமம் ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் பெற்றுள்ளதை அனுமதிக்கிறது என்றும் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி போன்று காவிரி டெல்டாவிலும் மக்களை பலிவாங்கத் துடிக்கும் தப்புக் கணக்கை மத்திய, மாநில அரசுகள் போடக்கூடாதுஎன்று கூறியுள்ள வைகோ, காவிரி தீரத்து மக்கள் தங்கள் உயிரைவிட மேலாக நேசிக்கும் நிலத்தையும், வேளாண் தொழிலையும் மற்றும் காவிரி உரிமையையும் பாதுகாப்பதற்கு அணி அணியாக திரண்டு வருவார்கள் என்றும் , எனவே காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியை மோடி அரசும், எடப்பாடி பழனிச்சாமி அரசும் கைவிட வேண்டும். இல்லையேல் மக்கள் போராட்டம் எரிமலைபோல் வெடிக்கும் என்று எச்சரிப்பதாகவும் வைகோ தனது அறிக்கையின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts