காவிரி பிரச்சனையில் மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்டத்தை ஏற்றது உச்சநீதிமன்றம்

காவிரி பிரச்சனையில் மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு செயல்திட்டத்தை உச்சநீதிமன்றம் இன்று ஏற்றுக் கொண்டதுடன் உடனடியாக அரசிதழில் வெளியிட உத்தரவிட்டுள்ளது.

டெல்லி : மே-18

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் நீண்ட இழுபறிக்குப் பின்னர், வரைவுத் திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் கடந்த 14ம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்தது. முதலில் காவிரி மேலாண்மை வாரியம் என ஒப்புக் கொண்ட நிலையில், பின்னர் திருத்தங்களுடன் காவிரி மேலாண்மை ஆணையம் என மாற்றப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான மத்திய அரசின் வரைவுத்திட்டத்தை ஏற்பதாக அறிவித்தது.

வரைவுத் திட்டத்தை உடனடியாக அரசிதழில் வெளியிடவும், பருவக்காலத்திற்கு முன்பாக செயல்படுத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் நடப்பு பருவ காலத்திலேயே காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாகவும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

காவிரி நதிநீர் ஆணையத்தின் தலைமையகத்தை டெல்லியிலேயே அமைக்கவேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் அணைகளில் நீர்வரத்து குறித்த விவரங்கள் ஆணையத்திடம் வழங்கப்பட வேண்டும். அணைகளை கண்காணித்து, உத்தரவுகளை பிறப்பிப்பதற்கான அதிகாரம் காவிரி நதிநீர் ஆணையத்திற்கே உள்ளது.

நதிநீர் பங்கீட்டில் பிரச்சனை ஏற்பட்டால் அதனை சரி செய்ய இறுதி முடிவு எடுப்பதற்கான அதிகாரமும் ஆணையத்திற்கு உள்ளது.  இதே போன்று நீர் இருப்பு, திறப்பு அளவுகளை கண்காணிக்கும் காவிரி ஒழுங்காற்று ஆணையத்தின் தலைமையகம் பெங்களூருவில் அமைக்கப்படும் என்றும் வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts