காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுகவினர் உண்ணாவிரதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்றுள்ளனர்.

சென்னை : ஏப்ரல்-03

சென்னை சேப்பாக்கத்தில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுடன் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுகவினர், காவிரி வழக்கில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே அதிமுக மாநில அமைப்பு செயலாளர் ஆதிராஜாராம் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், அமைச்சர்கள் வீரமணி, நிலோபர் கபில் மற்றும் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருப்பூர் ரயில் நிலையம் முன்பு அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய உடுமலை கே. ராதாகிருஷ்ணன், பொதுமக்களின் எழுச்சி போராட்டத்தால், மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.

திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகே அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வரும் 9 ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் குறித்து நல்ல முடிவு கிடைக்கும் என்று தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தூத்துக்குடியில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், அமைச்சர் கடம்பூர் ராஜூ, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை அதிமுக போராடும் என்று கூறினார்.

தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அமைச்சர் துரைக்கண்ணு, அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் மற்றும்சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

Related Posts