காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்க வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

 

 

டெல்லிக்கு புறப்பட்ட மோடியிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார். அதில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்தார்.

சென்னை, ஏப்ரல்-12

சென்னை அருகேயுள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சியின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த பிரதமர் மோடிக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருவிடந்தை சென்றடைந்த மோடி, ராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கி வைத்து, பார்வையிட்டார். விழாவில் ‘காலை வணக்கம்’ என தமிழில் பேசி உரையை தொடங்கிய மோடி, போர் தொடுத்து பிற நாடுகளை வெல்வது விட, மக்கள் மனங்களை வெல்ல வேண்டும் என்ற கொள்கையில் இந்தியா  நம்பிக்கை வைத்துள்ளது என்றார். அப்துல் கலாமின் கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்ட பிரதமர் மோடி, தமது உரையை முடிப்பதற்கு முன்னர் தொட்டனைத்தூறும் மணற்கேணி என்ற திருக்குறளை பிரதமர் மோடி மேற்கோள் காட்டினார். பின்னர் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ராணுவ தளவாட கண்காட்சியை தமிழகத்தில் நடத்தியற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் வைர விழா கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். 

 

அடையாறு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டர் மூலம் விமான நிலையம் வந்த மோடி, டெல்லிக்கு புறப்பட்டார். டெல்லிக்கு புறப்பட்ட மோடியிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார். அதில், டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி நீரை மட்டுமே நம்பியுள்ளனர். அடுத்த பருவகாலம் ஜூன் 1-ம் தேதி தொடங்க உள்ளதால் வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். காவிரி ஒழுங்காற்று குழுவையும் உடனடியாக அமைக்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்தார். 

 

Related Posts