காவிரி வரைவு செயல் திட்டத்தை மே 14-ம் தேதி தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு

 

காவிரி வரைவு செயல் திட்டத்தை வரும் 14-ம் தேதி தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, காவிரியில் இருந்து கர்நாடக அரசு இந்த மாதம் 4 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், மழை பற்றாக்குறையால் உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியாத நிலை உள்ளது என்று கர்நாடக அரசு நேற்று பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. தங்களின் தேவைக்கு மட்டுமே காவிரியில் தண்ணீர் இருப்பதால், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட இயலாது என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் வரைவு செயல் திட்ட அறிக்கை தயார் நிலையில் உள்ளது என்றும் அதனை தாக்கல் செய்ய மேலும் 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என்றும்  உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. இதனை ஏற்ற உச்சநீதிமன்றம் வருகிற 14 ஆம் தேதி வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. கர்நாடக சட்டசபை தேர்தல் மற்றும் தேர்தல் முடிவுக்கு பிறகே இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசு ஒரு முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

 

Related Posts