காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தமிழகத்துக்கு நீதி கிடைக்காது: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

 

 

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தமிழகத்துக்கு நீதி கிடைக்காது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் உரிமையை மீட்பதற்காக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த 12 நாட்களுக்கு மேலாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாகன பரப்புரை மேற்கொண்டு வருகிறார். கிராமம், கிராமமாக, வீதி, வீதியாக பிரச்சாரம் மேற்கொள்ளும் வைகோ, காவிரி விவகாரத்தில் மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் தமிழகத்துக்கு செய்துள்ள துரோகங்களை எடுத்துரைத்து வருகிறார். திருவாரூர் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்ட அவர், இன்று மன்னார்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என்று குற்றம்சாட்டினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டும் என்றும் வைகோ கேட்டுக்கொண்டார். காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தமிழகத்துக்கு நீதி கிடைக்காது என்றும் அவர் கூறினார்.  

காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை, மக்கள் அனுமதிக்க கூடாது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டார்.  

Related Posts