காவிரி வழக்கில் வரும் 14ம் தேதி நல்ல தீர்வு வராவிட்டால் அடுத்த கட்ட போராட்டம்: மு.க.ஸ்டாலின்

 

 

காவிரி வழக்கில் வரும் 14ம் தேதி நல்ல தீர்வு வராவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் குறித்து 15ம் தேதி முடிவெடுக்கப்படும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில்  தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் திமுக தலைமையிலான தோழமை கட்சியினர் அடுத்தடுத்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க திமுக தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டவை மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது, காவிரி வழக்கில் வரும் 14ம் தேதி நல்ல தீர்வு கிடைக்காவிட்டால், 15ம் தேதி மீண்டும் அனைத்துக்கட்சிக்கூட்டம் நடத்தி அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

Related Posts