காவிரி வழக்கு: சட்ட நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Want create site? Find Free WordPress Themes and plugins.

 

 

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

சென்னை, ஏப்ரல்-07 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.  அதே நேரத்தில் மத்திய அரசு, ‘‘ஸ்கீம் என்றால் என்ன?’’ என்று விளக்கம் கேட்டு தாக்கல் செய்துள்ள மனுவும் 9-ந்தேதி விசாரணைக்கு வர உள்ளது. இரு வழக்குகளிலும் தமிழக அரசு சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் வலுவான வாதங்களை எடுத்து வைத்து வாதாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு வழக்குகளிலும் தமிழக அரசு சார்பில் 9 பேர் கொண்ட மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராக உள்ளனர். அந்த சட்ட வல்லுனர்கள் குழுவில் மூத்த வழக்கறிஞர் சேகர்நாப்தே, லட்சுமணன், அருணாசலம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் 9 பேரும் இன்று டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர். அப்போது, மத்திய அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எந்தெந்த வாதங்களை முன் வைத்து வாதாட வேண்டும் என்று அவர்கள் முதலமைச்சருடன் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts