காவிரி வழக்கு: வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 2 வாரம் கால அவகாசம் கோரி மத்திய அரசு மனு

 

 

காவிரி வழக்கில் தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசு மேலும் இழுத்தடிக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 2 வாரம் கால அவகாசம் கேட்டு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ள்ளது. 

டெல்லி, ஏப்ரல்-27 

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி தீர்ப்பளித்தது. அதில், காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித்தீர்ப்பை செயல்படுத்த செயல் திட்டம் ஒன்றை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு ஏற்படுத்த உத்தரவிட்ட‌து. ஆனால் மத்திய அரசு எவ்வித செயல் திட்டத்தையும் உருவாக்காமல் உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடுவான மார்ச் 29-ம் தேதி முடியும் வரை மவுனம் காத்தது. இதையடுத்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘ஸ்கீம்என்பதன் பொருள் என்ன, அது காவிரி மேலாண்மை வாரியமாக இருந்தால், அதனை அமைக்க கூடுதலாக‌ 3 மாதங்கள் அவகாசம் வேண்டும் என்றும் கூறியது. அதே நேரத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு வேண்டுமென்றே நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தியுள்ளது என குற்றம்சாட்டி, தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி விவகாரத்தில் தொடர்புடைய மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஒரு செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. வருகிற மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான ஒரு செயல் திட்டத்தின் வரைவை தயாரித்து தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஆணையிட்டது. இந்நிலையில், காவிரி விவகாரத்தில் வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் 2 வார கால அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று மத்திய அரசு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. காவிரி வழக்கில் தீர்ப்பை செயல்படுத்த கால அவகாசம் போதவில்லை எனவும், வரைவு திட்டம் இன்னும் தயாராகவில்லை எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த மனு வரும் மே 3ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் மே 12ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டே, காவிரி விவகாரத்தில் தீர்வு காண மத்திய அரசு கால தாமதம் செய்து வருவதாக தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Posts