காவிரி விவகாரத்தில் குமாரசாமி யாரை சந்தித்தாலும், தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது

காவிரி விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி யாரை சந்தித்தாலும், தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை : ஜூன்-19

சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஆணையம் நிறைவேற்றும் என்று தெரிவித்தார். காவிரி விவகாரத்தில் பிரதான சாமியாக இருப்பது காவிரி மேலாண்மை ஆணையம் தான் என்று கூறிய ஜெயக்குமார், காவிரி விவகாரத்தில் குமாரசாமி யாரை சந்தித்தாலும் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்தார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் அதிமுகவுக்கு திரும்பி வருவது காலத்தின் கட்டாயம் என்று தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், அமைதியாக உள்ள தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த முயன்றால் அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று கூறினார்.

இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, கூட்டுறவு சங்கங்களுக்கு அரசியல் சாயம் கிடையாது என்றும் அதற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது எனவும் தெரிவித்தார். கூட்டுறவு சங்க தேர்தலில் முதன்முறையாக இந்த ஆண்டுதான் நீதிமன்றம் தலையிட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Related Posts