காஷ்மீரில் கல்வீச்சு தாக்குதலில் பலியான சென்னை இளைஞர் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் நிதியுதவி

 

 

காஷ்மீரில் நடைபெற்ற கல்வீச்சு தாக்குதலில் பலியான சென்னை வாலிபர் திருமணியின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நர்பால் பகுதியில் நேற்று ரோந்து சென்ற பாதுகாப்பு படையினர் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு பதிலடியாக பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்தனர். இந்த கல்வீச்சு தாக்குதலில் அங்கு சுற்றுலா சென்ற சென்னையை அடுத்த ஆவடியை சேர்ந்த திருமணி என்ற இளைஞர் படுகாயம் அடைந்தார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்து மருத்துவமனை சென்ற ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முப்தி  வாலிபரின் பெற்றோரை சந்தித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். அவரது உடல் இன்று இரவு விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வீச்சு தாக்குதலில் பலியான திருமணியின் குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 3 லட்சம் ரூபாய் கருணைத்தொகையாக வழங்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும், திருமணியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கைகளை எடுக்குமாறு டெல்லியில் உள்ள தமிழக இல்ல அதிகாரிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Posts