காஷ்மீர் உடனான எல்லை தாண்டிய வர்த்தகம் தடை:  காஷ்மீர் அரசியல் கட்சிகள் அதிருப்தி

இந்தியா- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இடையேயான எல்லைத்தாண்டிய வர்த்தகம், பாரமுல்லா மாவட்டம் உரியிலுள்ள சலமாபாத், பூஞ்ச் மாவட்டத்திலுள்ள சக்கான் டா-பாக் ஆகிய இடங்களில்  வாரத்துக்கு 4 நாட்கள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு இந்தியா தற்போது தடை விதித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

எல்லை தாண்டிய வர்த்தகத்தை பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் சில சக்திகள் தவறாகப் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளது.  இந்த வர்த்தகத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக ஆயுதங்கள், போதைப் பொருட்கள், கள்ள கரன்சி நோட்டுகள் மற்றும் பிற பொருள்கள் பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்படுவதாக விசாரணை அமைப்புகள் அறிக்கை அளித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதைப் பரிசீலித்து சலமாபாத், சக்கான் டா- பாக் ஆகிய இடங்களில் நடைபெறும்  எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு தற்காலிகத் தடை விதிப்பதென்று அரசு முடிவு செய்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட இந்த வர்த்தகத்தை தடை செய்திருப்பபது பிற்போக்குத்தனமானது என்று காஷ்மீர் அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கை, அண்டை நாட்டுடனான உறவை மேலும் மோசமாக்கவே செய்யும் என்றும் காஷ்மீரை அரசியல் நலனுக்காக பாஜக பலிகடா ஆக்குவதாகவும்  மக்கள் ஜனநாயக கட்சி  தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான  மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார். வாஜ்பாய் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு அமைதி முயற்சியையும் தற்போதைய மத்திய அரசு நிராகரிப்பதாக தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

Related Posts