காஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்யக் கோரி வரும் 22-ந் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் திமுக உள்ளிட்ட கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்-ஸ்டாலின்

காஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்யக் கோரி வரும் 22-ந் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் திமுக உள்ளிட்ட கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

“அமைதி திரும்புகிறது” என்று செய்தி பரப்பிக் கொண்டே, கடந்த 5-ந் தேதி முதல் காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரையும் கைது செய்து, தொலை தொடர்புகளை துண்டித்து, காஷ்மீரில் “அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமையை” செயல்படுத்திக் கொண்டிருப்பதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.  காஷ்மீரை இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து மத்திய அரசு துண்டித்து வைத்திருக்கிறது என அவர் புகார் கூறியுள்ளார். காஷ்மீரில் ஜனநாயக படுகொலையை செய்து விட்டு, நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தி “காஷ்மீரில் சாதித்து விட்டோம்” என்று கூறி வருவது ஒரு வகை அரசியலே தவிர, நாட்டின் மீதுள்ள பற்றாகவோ, பாசமாகவோ தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரத்தில் திணறி, தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்படுகின்ற அவல நிலைமை பற்றி கவலைப்படாமல், அதனால் மக்கள் பாதிக்கப்படுவது குறித்து கண்டு கொள்லாமல் ஒரு மத்திய அரசு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது என அவர் கூறியுள்ளார். பிரிட்டிஷாரிடம் போராடிப் பெற்ற சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும், சர்வாதிகார நடவடிக்கைகளை மூலம் பிடுங்கிக் கொள்ள மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு முயற்சி செய்வதை தடுத்தே தீர வேண்டியது ஜனநாயகத்தின் நம்பிக்கைக் கொண்ட அனைத்து கட்சிகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.  ஆகவே கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர்கள் அனைவரையும் விடுதலை செய்யக் கோரி வரும் 22-ந் தேதி காலை 11.00 மணி அளவில் டெல்லி ஜந்தர் மந்தரில்,  ஜனநாயகத்தின் நம்பிக்கைக் கொண்ட அனைத்து கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கும் “கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் எனவும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Related Posts