காஷ்மீர் மக்களின் நிலை குறித்து வருந்தி பதவி விலகிய ஆட்சியர்

காஷ்மீர் மக்களின் நிலை குறித்து வருந்தி பதவி விலகிய ஆட்சியர் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி யூனியன் பிரதேசத்தின் ஆட்சியராக பணியாற்றி வந்தவர் கண்ணன் கோபிநாதன். எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் பட்டதாரியான இவர் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்தவர்.

ஜம்மு-காஷ்மீரில் லட்சக்கணக்கான மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதை தான் விரும்பவில்லை என்றும் கூறி கண்ணன் கோபிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தை உள்துறை அமைச்சகத்திற்கு அவர் அனுப்பியிருந்தார். இதையடுத்து கடந்த 27-ம் தேதி உள்துறை அமைச்சகத்தில் இருந்து வந்த அறிவிப்பில், அவர் உடனடியாக பணிக்கு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் அவரது ராஜினாமா விண்ணப்பம் அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் வரையில் அவர் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கண்ணன்  கோபிநாதன், காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து 20 நாட்களுக்கும் மேலாகியும், எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றார். காஷ்மீர் மக்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில், பணியை மீண்டும் தொடர முடியும் என தனக்கு தோன்றவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்

Related Posts