காஷ்மீர் முழுவதும் இருந்த பயங்கரவாதத்தை  2 மாவட்டங்களுக்குள் அடக்கி இருக்கிறது: பிரதமர் மோடி 

பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்தார். அம்ரேலி நகரில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், குஜராத் மாநிலத்தில் கற்றுக் கொண்ட அரசியல் பாடங்களை கொண்டே பிரதமர் பதவியில் திறம்பட செயல்பட முடிந்தது என்றார்.

2017-ம் ஆண்டு சீனாவுடன் டோக்லாம் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பிரச்சனையை, குஜராத்தில் கற்றுக் கொண்ட பாடம்தான் தீர்க்க உதவியதாக அவர் கூறினார்.

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதத்தை மத்திய அரசு கடுமையாக ஒடுக்கி உள்ளதாக கூறிய அவர், அந்த மாநிலம் முழுவதும் இருந்த பயங்கரவாதத்தை 2 மாவட்டங்களுக்குள் அடக்கப்பட்டுள்ளது என்றார்.

காஷ்மீரில் புல்வாமா பகுதியில் தாக்குதல் நடத்தியதற்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறிய மோடி, அப்படி பதிலடி கொடுத்த பிறகு தான் பாகிஸ்தான் பணிந்தது என்றார்.

சமாதானத்திற்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியதை சுட்டிக்காட்டிய அவர், இதற்கு முன்பு பாகிஸ்தான் தரப்பில் இருந்து இப்படி பேசப்பட்டது இல்லை என்றார்.

Related Posts