காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி மிகப்பெரிய தவறு செய்து விட்டார் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் இந்திய பிரதமர் மோடி மிகப்பெரிய தவறு செய்து விட்டதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் 73ஆவது சுதந்திர தினத்தையொட்டி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் உரையாற்றினர். அப்போது காஷ்மீர் பிரச்சினை குறித்து பேசிய அவர், “காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து பிரதமர் மோடி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார் என தெரிவித்தார். இந்த முடிவு மோடிக்கும், பா.ஜ.க.விற்கும் மிகப்பெரிய நஷ்டத்தை விளைவிக்கும் என்றும் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்கி விட்டார்கள் என்றும் கூறினார்.

ஐ.நா.விடமும் சர்வதேச நீதிமன்றத்திடமும் இந்த விவகாரத்தை கொண்டு செல்வோம் என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவின் பன்முகத்தன்மையும், மதசார்பின்மையும் அழிந்து தற்போது அங்கே பயங்கரவாதம் பெருகிவிட்டது என்று தெரிவித்தார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் இந்தியா அதன் அரசியலமைப்புக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் எதிராக செயல்பட்டுள்ளதாக கூறிய அவர், நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு குலைந்து மனித உரிமைகள் மீறப்படுகிறதோ அப்போது அது ஒரு நிலையற்ற குடியரசாக மாறிவிடுகிறது” என்று அவர் கூறினார்.

Related Posts