காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையிட கூடாது : இம்மானுவேல் மேக்ரான்

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையிட கூடாது என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், மற்றும் பக்ரைன் ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று பிரான்ஸ் சென்றடைந்த அவரை தலைநகர் பாரீசில் அந்த நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வரவேற்றார்.
பின்னர் பாரீஸ் அருகே உள்ள சாண்டிலி அரண்மனையில், இருநாட்டு உறவு, டிஜிட்டல், சைபர் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதுமட்டுமின்றி பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் சுமார் 90 நிமிடங்கள் விவாதித்தனர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரான்ஸ் அதிபர் மேக்ரான், காஷ்மீர் பிரச்சனையை இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். இதில் மூன்றாவது நாடு தலையிடவோ, வன்முறையை தூண்டவோ கூடாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

காஷ்மீர் பிராந்தியத்தில் அமைதியான சூழலை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார். இன்னும் சில தினங்களில் பாகிஸ்தான் பிரதமரிடமும் பேச உள்ளதாகவும், அப்போது காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக இரு தரப்பு மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவுக்கு வழங்கப்படும் 36 ரபேல் போர் விமானங்களில் முதல் விமானம் அடுத்த மாதம் டெலிவரி செய்யப்படும் என்று அவர் கூறினார்.

Related Posts