காஷ்மீர் விவகாரம் : மோடியுடன் நேரில் பேச உள்ளதாக டிரம்ப் அறிவிப்பு

காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடியுடன் நேரில் பேச உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோருடன் டிரம்ப் தொலைபேசியில் பேசியிருந்தார்.
இதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் டிரம்ப் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியா – பாகிஸ்தான் இடையே தற்போதுள்ள பிரச்னை மிகத்தீவிரமானது என்றும், இதில் மதமும் சம்மந்தப்பட்டிருப்பதால் மிகவும் சிக்கலானது என்றும் டிரம்ப் தெரிவித்தார். இந்த சூழலில் இவ்விரு நாடுகளுடனுடனும், தங்களுக்கு நல்லுறவு இருப்பதாகவும், எனவே மத்தியஸ்தம் செய்து வைக்கவும் தயார் என்றும் டிரம்ப் தெரிவித்தார். காஷ்மீர் விவகாரத்தில் 3ம் தரப்பு தலையீடு தேவையில்லை என்பது இந்தியாவின் திட்டவட்டமான கொள்கையாக உள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் உலக நாடுகள் தலையிட வேண்டும் என பாகிஸ்தான் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் இந்த வார இறுதியில் நடைபெறும் ஜி 7 நாடுகளின் கூட்டத்தில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாகவும், அப்போது காஷ்மீர் விவகாரம் குறித்து அவருடன் பேச உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Related Posts