குடிநீர் பஞ்சத்தை போக்க வலியுறுத்தி நாளை கண்டன ஆர்ப்பாட்டம்-திமுக அறிபிப்பு

வரலாறு காணாத வகையில் தமிழகம் முழுவதும் வறட்சி நிலவி வருகிறது. ஏரி, குளங்கள் வற்றி குடிநீருக்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் மிக மோசமான நிலைக்கு சென்று விட்டது. தண்ணீருக்காக இரவு, பகல் பாராமல் பொதுமக்கள் காலி குடங்களுடன் வீதிகளில் சுற்றி திரிகின்ற காட்சிகளை தினமும் பார்க்க முடிகிறது. தண்ணீர் கேட்டு பல இடங்களில் பொதுமக்கள் குடிநீர் வாரியத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, தி.மு.க. சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது. இதற்கிடையே, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை காலை 9.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக திமுக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில்,

சென்னையில் குடிநீர் பஞ்சத்தை போக்க வலியுறுத்தி நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் குடிநீர் தேவையை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றிட வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts