குட்கா ஊழல் புகார் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

 

 

தமிழக அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீதான குட்கா ஊழல் புகார் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை, ஏப்ரல்-26

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான்மசாலா உள்ளிட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய அமைச்சர், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க தரப்பில் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2015ம் ஆண்டு எம்.டி.எம் பான் மசாலா நிறுவனத்தில் வருமான வரித்துறையினரின் நடத்திய சோதனையில், 250 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த சோதனையில் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக ஆவணங்களை கைபற்றியதாக அன்பழகன் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சி.பி.ஐ அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில், குட்கா ஊழல் புகார் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி, நீதிபதிகள் உத்தரவிட்டனர். உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை திமுக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளன. இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தீர்ப்பு நகலை பார்த்த பிறகே விளக்கம் அளிக்க முடியும் என்று கூறினார்.

Related Posts