குட்கா முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை – உச்சநீதிமன்றம்

குட்கா ஊழல் வழக்கில், சிபிஐ விசாரணைக்கு தடை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

டெல்லி : மே-18

தமிழ்நாட்டில், தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைசெய்ய உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு கையூட்டு வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த வழக்கை சி.பி.விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி, திமுக எம்எல்ஏ அன்பழகன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, குட்கா முறைகேடு புகார் வழக்கை, சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதை எதிர்த்து, தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் என்பவர், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், வழக்கின் தீர்ப்பை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரோஹிங்டன் நாரிமன், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று பிறப்பித்தது. அதில், குட்கா முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க தடை விதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளனர்.

Related Posts