குட்கா வழக்கு: வேறு மாநில சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழு அமைக்க மு.க.ஸ்டாலின் கடிதம்

 

 

குட்கா ஊழல் வழக்கு குறித்து விசாரிக்க வேறு மாநில சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என டெல்லியில் உள்ள சி.பி.ஐ. இயக்குனர் மற்றும் மத்திய உள்துறை செயலாளர் ஆகியோருக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

சென்னை, ஏப்ரல்-27

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்,  டெல்லி சி.பி.ஐ. இயக்குனர் மற்றும் இந்திய உள்துறை செயலாளர் ஆகியோருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக காவல்துறை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் தொடர்புடைய குட்கா ஊழல் வழக்கு விசாரணையை, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இருந்து சி.பி.ஐ. அமைப்புக்கு மாற்றி ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது.  வழக்கின் முக்கியத்துவத்தை கருதியும், தமிழ்நாட்டின் முக்கியமான இந்த வழக்கு விசாரணை நேர்மையாகவும், நியாயமாகவும், விரைவாகவும் நடைபெறும் பொருட்டும் நேர்மையான, அனுபவமிக்க, வேறு மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் கொண்ட சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுக் குழுவை உடனடியாக அமைத்து, தடைசெய்யப்பட்ட குட்கா போதைப்பொருள் விற்பனை ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் நேர்மையற்ற அதிகாரிகள் என ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்துள்ள இரண்டையும் அப்புறப்படுத்தி, நீதியை நிலைநாட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Posts