குட்கா விவகாரம்: டி.ஜி.பி ராஜேந்திரன் பதவி விலக வலியுறுத்தி சென்னையில் திமுக பேரணி

 

 

குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய டி.ஜி.பி.ராஜேந்திரன் பதவி விலக வலியுறுத்தி சென்னையில் டி.ஜி.பி. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, ஏப்ரல்-27

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், காவல்துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர்புடைய  குட்கா ஊழல் வழக்கு  சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள டி.ஜி.பி. உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என தி.மு.க. வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி சென்னையில் தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தை நோக்கி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் தலைமையில் ஏராளமான தி.மு.க.வினர் சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய  சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய அனைவரும் பதவிகைளை ராஜினாமா செய்து சிபிஐ விசாரணையை சந்திக்க வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.அன்பழகன், கு.க.செல்வம் உள்ளிட்ட திமுகவினர் டி.ஜி.பி. அலுவலகத்தை நெருங்கியபோது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். திமுகவினரின் இந்தப்போராட்டத்தால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Posts