குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் நிறுத்த தடை விதிக்க முடியாது

குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் நிறுத்த, தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

            மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, கிரிமினல் வழக்கில் தண்டனை விதிப்புக்கு ஆளாகும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யப்படுவதுடன், தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பப்ளிக் இன்ட்ரஸ்ட் பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு, பாஜக நிர்வாகி அஸ்வினி குமார் உபாத்யாய உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அதில் குற்ற வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.  இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திராசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுக்கள் மீது செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி தீர்ப்பு வெளியிடப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர். இதன்படி, அந்த மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்கிய  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் அமர்வு, குற்றபத்திரிகை தாக்கல் செய்தாலே தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது எனவும்,  அரசியலில் , லஞ்சமும், ஊழலும்  கொஞ்சம் கொஞ்சமாக  வளர்ந்து வருவது வேதனை அளிப்பதாகவும் கூறியது.  நாடாளுமன்றம் மூலமே சட்ட திருத்தத்தால் தடை விதிக்க முடியும் எனவும்,  குற்றப் பின்னணி உள்ளவர்களை தேர்தலில் நிறுத்துவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தது.  அரசியல் கட்சிகள் தாங்களாகவே அரசியல் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அறிவுறுத்தியுள்ளது.

            இதனிடையே, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வழக்கறிஞராக பணியாற்ற தடை கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வழக்கறிஞர்களாகபணியாற்றலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Posts