குழந்தைகள் பலாத்கார வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உத்தரவு

 

 

குழந்தைகள் பலாத்கார வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி, மே-01 

நாடுமுழுவதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத் தண்டணை விதிக்கும் வகையில்  மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. நாட்டில் 1.12 லட்சம் வழக்குகள் நிலுவை உள்ள நிலையில் தமிழகத்தில் 2 ஆயிரத்து 3 போக்சோ வழக்குகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் குழந்தைகள் பலாத்கார வழக்குகளை முறையாக விசாரிப்பதில்லை என்றும் தனி நீதிமன்றங்கள் அமைத்து விசாரிக்க உத்தரவிடவேண்டும் என்றும் அலோக் ஸ்ரீவத்சவா என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர் மற்றும் சந்திரசூட் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பளித்தது.

அதில், குழந்தைகள் பலாத்கார சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து விரைவாக விசாரணை நடப்பதை அனைத்து உயர்நீதிமன்றங்களும் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. போஸ்கோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை தேவையில்லாமல் ஒத்திவைக்க கூடாது என விசாரணை நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்குகளின் விசாரணையை முறைப்படுத்தவும், கண்காணிக்கவும், 3 நீதிபதிகள் கொண்ட குழுவை உயர்நீதிமன்றங்கள் அமைத்து கொள்ளலாம் எனவும் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

Related Posts