குழந்தை கடத்தல் பீதியால் அப்பாவிகள் கொலை: அரசு நடவடிக்கை எடுக்க ராமதாஸ் கோரிக்கை

 

 

குழந்தைக் கடத்தல் பீதியால் அப்பாவிகள் கொலை செய்யப்படுவதாகவும், குற்றவாளிகள் மீது தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது ;-

“சென்னையிலிருந்து திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கோவிலுக்கு வழிபாடு நடத்துவதற்காகச் சென்ற மூதாட்டியை, அவர் குழந்தைகளை கடத்த வந்திருக்கலாம் என்ற அச்சத்தில், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அடித்துக் கொலை செய்துள்ளனர்.

 திருவள்ளூர் மாவட்டத்திலும் இதேபோன்ற நிகழ்வு நடந்துள்ளது. தவறான புரிதலால் அப்பாவிகளை பலிவாங்கிய இந்த செயல்கள் துரதிருஷ்டவசமானவை.

மலேஷியாவில் வணிகம் செய்து வந்த ருக்மினி அம்மாள் என்ற மூதாட்டி சென்னை பல்லாவரத்தில் உள்ள சொந்த வீட்டிற்கு வந்திருக்கிறார். அங்கிருந்து திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு செல்வதற்காக தம்புக்கொட்டான்பாறை என்ற இடத்தில் காரை நிறுத்தி வழி கேட்ட போது, பாசத்தின் மிகுதியால் அங்கு நின்றுகொண்டிருந்த குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்துள்ளார்.

நல்லெண்ணத்துடன் கூடிய இந்த செயல் தான் அவரது குற்றம். குழந்தைகளுக்கு அவர் சாக்லேட் கொடுத்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள், அவரையும், அவரது குடும்பத்தினரையும் மயக்க மருந்து கலந்த சாக்லெட்டுகளைக் கொடுத்து குழந்தைகளை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நினைத்து தாக்க முயன்றனர்.

அவர்களிடமிருந்து தப்பிக்க மூதாட்டியின் குடும்பத்தினர் காரில் ஏறிச் சென்ற நிலையில், அவர்களை கிராம மக்கள் துரத்திப்பிடித்து தாக்கியுள்ளனர். இதில் மூதாட்டி கொல்லப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினர் 4 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல், திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை குழந்தையைக் கடத்த வந்தவராகக் கருதி அப்பகுதி மக்கள் உருட்டுக்கட்டைகளால் அடித்து கொலை செய்துள்ளனர். அத்துடன் அவரது உடலை அங்குள்ள பாலத்தில் கட்டி தொங்கவிட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தின் பல இடங்களிலும் அப்பாவிகள் பலர் குழந்தைகளைக் கடத்த வந்தவர்கள் என்ற ஐயத்தில் கொடூரமாக தாக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மனித உரிமைகளையும், உயிர்களையும் மதிக்காத இத்தகைய செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது. இவை உடனடியாக தடுக்கப்பட வேண்டும்.

இவை அனைத்திற்கும் கடந்த சில வாரங்களாக வட மாவட்டங்களில் பரவி வரும் வதந்திகள் தான் காரணம் ஆகும். வட மாநிலங்களைச் சேர்ந்த குழந்தைக் கடத்தல் கும்பல்கள் திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஊடுருவியிருப்பதாகவும், அவர்கள் குழந்தைகளை கடத்திச் செல்வதாகவும் பரவி வரும் வதந்திகளால் அச்சமடைந்த மக்கள், சந்தேகத்திற்கிடமான மனிதர்களைப் பார்த்தால் தாக்கத் தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் வேலை செய்வதற்காக வந்துள்ள வடமாநில இளைஞர்கள், திருநங்கைகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் தான் இத்தகைய தாக்குதலுக்கு ஆளாகின்றனர். தங்களையே கவனித்துக் கொள்ளும் திறனற்றவர்களான மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகளை கடத்தப் போகிறார்கள்? என்ற யதார்த்தம் மக்களுக்கு உரைத்து இருந்தால் இத்தகைய நிகழ்வுகள் நடந்திருக்காது.

ஆனால், தங்களின் குழந்தைகளை கடத்திச் சென்று விடுவார்களோ? என்ற அச்சம் அவர்களின் சிந்திக்கும் திறனை செயல்படாமல் தடுத்து, உணர்வுகளின் அடிப்படையில் மட்டுமே செயல்பட வைத்திருக்கிறது. அதனால் தான் ஊருக்குள் வருவோரை விருந்தினர்களாக கருதி உபசரிக்கும் மக்கள் இப்படி மாறியிருக்கின்றனர். இதற்கு அவர்களை மட்டுமே குறை கூற முடியாது.

அதேநேரத்தில் தமிழக அரசும், காவல்துறையும் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட்டிருந்தால் இத்தகைய நிகழ்வுகளை தடுத்திருக்க முடியும். வாட்ஸ்-ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், வட மாவட்டங்களில் குழந்தைகள் கடத்தல் கும்பல் ஊடுருவியிருப்பதாக வதந்திகள் பரவிய போதே, அதனால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்று யூகித்து அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால், குழந்தைகளை கடத்த வட மாநில கும்பல் வந்திருக்கிறது என்பது வதந்தி என்று செய்திக்குறிப்பு வெளியிட்டதுடன் காவல்துறை அதன் கடமையை முடித்துக் கொண்டது. வட மாவட்ட மக்கள் அனைவரின் வீடுகளுக்கும் சமூக ஊடகங்கள் மூலம் வெள்ளமென வதந்திகள் பாய்ந்த வேகத்தில் காவல்துறையினரின் செய்திக்குறிப்பு எடுபடாமல் போய்விட்டது. காவல்துறையின் விளக்கம் யாரையும் சென்றடையவில்லை.

தொடக்கத்தில் அப்பாவி மக்கள் சிலர் தாக்கப்பட்ட போதே, காவல்துறையினர் விழித்துக் கொண்டு, உள்ளூர் காவல்நிலையங்கள் மூலம் அந்தந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தால் மக்கள் மத்தியில் நிலவிய அச்சமும், பதற்றமும் விலகியிருக்கும்.

இத்தகைய கொடூரத் தாக்குதல்களும், உயிரிழப்புகளும் தடுக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் வட மாவட்டங்களில் நடைபெற்ற தாக்குதல்களுக்கு காவல்துறையும் பொறுப்பேற்க வேண்டும்.

இனியாவது தமிழக அரசும், காவ்ல்துறையும் விழித்துக் கொண்டு வதந்திகள் குறித்த மக்களின் அச்சத்தைப் போக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரும் தங்களின் சமூகக் கடமைகளை உணர்ந்து பொது அமைதியை குலைக்கும் எந்த செய்தியையும் பகிரக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு உலகத்தர சிகிச்சையையும் அரசு வழங்க வேண்டும்”.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Related Posts