கூட்டுறவு சங்கத்தேர்தலை நியாயமாக நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

 

 

கூட்டுறவு சங்க தேர்தலை நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் அண்மையில் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் பெரும் மோதல்கள் வெடித்தன. குறிப்பாக ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிகள், எதிர்க் கட்சியினரின் மனுக்களை வாங்காமலேயே புறக்கணித்தனர். இதனால் அதிருப்தியடைந்த எதிர்க்கட்சியினர் கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பான வழக்கை கடந்த முறை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கூட்டுறவு சங்க தேர்தலுக்கான கூடுதல் ஆணையர் வாசுகி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனையேற்று கூட்டுறவு சங்க தேர்தலுக்கான கூடுதல் ஆணையர் வாசுகி உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். வழக்கை விசாரித்த  உயர்நீதிமன்றம், கூட்டுறவு சங்க தேர்தலை நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடத்த வேண்டும். என்று உத்தரவிட்டது. முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையிட்ட உயர்நீதிமன்றம், நல்ல நோக்கத்திற்காக தொடங்கப்பட்ட கூட்டுறவு இயக்கம் தற்போது நலிவடைந்து வருகிறது என்று தெரிவித்தது. இதனை மீண்டும் பொலிவாக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு என்று அறிவுறுத்திய உயர்நீதிமன்றம், கூட்டுறவு சங்க தேர்தல் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புதிதாக புகார்கள் அளிக்கலாம் என்றும் புகார்கள் குறித்து 8 வாரத்தில் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்க தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Related Posts