கெஜ்ரிவால் உள்பட 11 பேருக்கு நீதிமன்றம் சம்மன்

தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் முதல் அமைச்சர் கெஜ்ரிவால் உள்பட 11 பேருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

              டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்  வீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற  ஆலோசனை கூட்டத்தில்,  அரசு தலைமைச்செயலாளர் அன்ஷூ பிரகாஷ் கலந்து கொண்டார். அப்போது  ஆளும் ஆம் ஆத்மி கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2 பேர், தலைமைச்செயலாளரை தாக்கியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் டெல்லி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த டெல்லி போலீசார், இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில்,  டெல்லியில் தலைமைச்செயலாளர் தாக்கப்பட்டதற்கு முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மனிஷ் சிசோடியா மற்றும் 11 சட்டப்பேரவை உறுப்பினர்களே பொறுப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் அக்டோபர் 25 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று முதல் அமைச்சர் கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியா உள்பட 11 பேருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

Related Posts