கேந்திரிய வித்யாலயா நிர்வாகத்திற்கு வைகோ கண்டனம்

பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கும் கேந்திரிய வித்யாலயா நிர்வாகத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2014 ஆம் ஆண்டு பொறுப்பேற்றதிலிருந்து பாடநூல்களில் இந்துத்துவ சனாதன கருத்துக்களை திணிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடக்கும் மாநிலங்களில் பாடத் திட்டங்களே மதவாத கண்ணோட்டத்துடன் மாற்றும் வேலைகள் திட்டமிட்டு நடத்தப்படுவதாகவும் அதே நிலையை தமிழ்நாட்டில் உருவாக்குவதற்கு கல்வித்துறையில் ஊடுருவி உள்ள ‘காவி புல்லுருவிகள்’ பாடநூல்களில் நஞ்சை விதைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாகவும், அதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசும் துணைபோய்க் கொண்டு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

 

தமிழக அரசு வெளியிட்ட 12 ஆம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் தமிழ் மொழியை விட சமஸ்கிருதம் தொன்மையானது என்ற கருத்தைத் திணிக்கும் வகையில் தமிழ் மொழி கி.மு. 300 ஆண்டுகள் பழமையானது என்றும், சமஸ்கிருதம் கி.மு. 2000 ஆண்டுகள் பழமையானது  என்றும் கூறப்பட்டிருந்ததாகவும் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தும் அது குறித்து விளக்கம் கேட்கப்பட்டு இருப்பதாக தமிழக கல்வித்துறை அறிவித்திருந்த்தை வைகோ தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மேலும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் மதவாத சனாதன கும்பலின் சிறுபான்மை, தலித் மக்களுக்கு எதிரான சிந்தனையை பிஞ்சு உள்ளங்களில் விதைக்கும் வகையில் இடம்பெற்றிருப்பதாக  வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

சிறுபான்மை மக்களையும், தலித் மக்களையும் இழிவுபடுத்தி, பள்ளி மாணவர்களின் இளம் நெஞ்சில் நச்சுக் கருத்துகளைப் புகுத்தி உள்ள கேந்திர வித்யாலயா நிர்வாகத்திற்கு கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், வினாத்தாள்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts