கேரளாவிற்கு ரூ.600 கோடி – மத்திய அரசு

கேரளாவுக்கு 89,540 டன் உணவு தானியம், 100 டன் பருப்பு இலவசமாக வழங்கப்படுவதுடன் 600 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உணவு  அமைச்சர்  ராம்விலாஸ் பஸ்வான், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம், 1 லட்சத்து 18 ஆயிரம் டன் உணவு தானியங்கள் வழங்குமாறு கேட்டுக்கொண்டது என்று தெரிவித்தார்.

இந்நிலையில், மத்திய அரசு, 89 ஆயிரத்து 540 டன் உணவு தானியங்களும், 100 டன் பருப்பு வகைகளும் கேரளாவுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.கேரளாவில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வராத மக்களுக்கு இப்பொருட்களை வினியோகம் செய்ய கேரள அரசு பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் இவை முதல்கட்ட உதவிதான்  எனவும் தேவைப்பட்டால், இன்னும் உதவ தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

கேரளாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்துள்ளது எனவும் 5,645 முகாம்களில் 12.47 லட்சம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு மத்திய அரசு .600 கோடி ரூபாய் நிதியை விடுவித்துள்ளது. கேரளாவில் மறுகட்டமைப்பு பணிகள் செய்வது குறித்து ஆலோசிக்க வரும் ஆக.30-ல் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இதனிடையே, தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு 241 லாரிகள் மூலம் 17.51 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாக  வருவாய் நிர்வாக ஆணையர் கூறி உள்ளார்.

==

Related Posts