கேரளாவிற்கு வெள்ள நிவாரண நிதி 700 கோடி – மத்திய அரசு நிராகரிப்பு

கேரளாவின் வெள்ள நிவாரண நிதிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழங்கும் 700கோடி ரூபாய் நிதியுதவியை மத்திய அரசு நிராகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் வரலாறு காணாத மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி நிலைகுலைந்துள்ளது. நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அந்த மாநிலத்திற்கு 2 ஆயிரத்து600 கோடி ரூபாய் அளவுக்கு தேவைப்படுகிறது. கேரளாவில் மழை தீவிரமடைந்த நேரத்தில் இருந்தே முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி அளிக்க முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தி வந்தார். அதன்படி பல மாநில அரசுகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என பலர் தங்களால் முடிந்த உதவிகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு கேரளாவுக்கு 700 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்தது. இதற்கு, கேரள முதல்வர் பினராயி விஜயனும் பிரதமர் மோடியும் தங்களது நன்றியை தெரிவித்தனர். ஆனால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அளிக்கும் நிதியுதவியை மத்திய அரசு ஏற்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்தியாவில் ஏற்பட்ட சுனாமி பேரழிவு ஏற்பட்ட கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து இயற்கை பேரிடர்களை எதிர்கொள்வதற்கு இந்திய அரசு வெளிநாடுகளின் நிதியுதவியை ஏற்க மறுத்து வருகிறது. இதுபோன்ற பேரழிவுகளையும், அதன் சேதங்களையும் சீர் செய்ய இந்தியாவிலேயே போதுமான வசதிகள் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த கொள்கை கடந்த 14 ஆண்டுகளாக இந்திய அரசால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் 700 கோடி ரூபாய் நிவாரண உதவியை ஏற்பது குறித்து மத்திய அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Related Posts