கேரளாவிற்கு 700 கோடி ரூபாய் நிதி அறிவிப்பு – முதல்வர் பினராயி விஜயன்

 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு 700 கோடி ரூபாய் நிதி வழங்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முன் வந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

      கேரளாவில் வரலாறு காணாத மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்களால் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் நாசமடைந்துள்ளன. கேரள வெள்ள நிவாரணமாக முதல் கட்டமாக மத்திய அரசு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது. கேரள மாநில அரசு முதல் கட்டமாக 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் மத்திய அரசு 500 கோடி மட்டுமே வழங்கியது, விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய, கேரளா முதல்வர் பினராயி விஜயன்,  கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு 700 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது என தெரிவித்தார். மேலும், ஆகஸ்ட்30ம் தேதி சிறப்பு சட்டசபையை கூட்டுவதற்கு அனுமதிக்குமாறு ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார். சிறப்பு சட்டசபை கூட்டத்தின் போது வெள்ளச்சேதம், மீட்பு பணிகள் மற்றும் நிவாரணங்கள் குறித்து விரிவாக விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கேரளாவில் கடந்த இரு தினங்களாக கனமழை ஓய்ந்து, இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பி வருகிறது. இருப்பினும் உடைமைகள், வீடுகளை இழந்தவர்கள் இன்னும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Related Posts