கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதைத் தொடர்ந்து, மத்தியக் குழுவினர் ஆய்வு

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதைத் தொடர்ந்து, மத்தியக் குழுவினர் அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளா : மே-22

கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் மரணத்தை ஏற்படுத்தும் நிபா என்ற வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 16  பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸின் தன்மையை கண்டறிவதற்காக உயிரிழந்தவர்களின் ரத்த மாதிரிகள், புனே தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் 10-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கேரளத்தில் நிபா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா உத்தரவின்பேரில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கேரளாவின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

கேரளாவின் எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. நிபா வைரஸ் காய்ச்சல் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவை அரசு மருத்துவமனையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நிபா வைரஸ் காய்ச்சலுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

Related Posts