கேரளாவுக்கு வழங்கப்பட்ட 600 கோடி ரூபாய் அல்லாமல் மேலும் உதவிகள் வழங்கப்படும் – மத்திய அரசு

கேரளாவுக்கு முதலில் வழங்கப்பட்ட 600 கோடி ரூபாய் அல்லாமல் மேலும் உதவிகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

      பெருத்த மழை, வெள்ளத்தால் உருக்குலைந்து போன கேரள மாநிலத்தை சீரமைப்பதற்கு நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். வெளிநாடுகளும் நிதி உதவி வழங்க முன் வந்து உள்ளன. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாயும், கத்தார் நாடு 35 கோடி ரூபாயும் நிதி உதவி தர முன் வந்துள்ளன. ஆனால் மத்திய அரசு இந்த நிதி உதவிகளை ஏற்க விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகின. வெளிநாட்டு நிதி உதவியை மத்திய அரசு ஏற்க மறுப்பதற்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில், கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரணமாக 1 லட்சத்து 90 ஆயிரம் ஈரோவை, இந்திய செஞ்சிலுவை சங்கத்திடம் வழங்கப்போவதாக ஐரோப்பிய கூட்டமைப்பு அறிவித்து உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கேரளாவுக்கு மனிதாபிமான அடிப்படையில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத்தயார் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பிரதமர் நரேந்திர மோடி வெள்ளச் சேதத்தை ஆய்வு செய்த பிறகு அறிவித்த 500கோடி ரூபாய் நிவாரணமும், அதற்கு முன்பு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்த 100 கோடி ரூபாயும் கேரள அரசுக்கு அளிக்கப்பட்டு விட்டது எனவும் இது முதல்கட்ட நிவாரண உதவிதான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக மத்திய அமைச்சகங்களுக்கு இடையிலான குழு, கேரளத்துக்குச் சென்று வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய இருப்பதாகவும்,அதன் அடிப்படையில் கேரளத்துக்கு மீண்டும் தேவைப்படும் நிதி அளிக்கப்படும் எனவும் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts