கேரளா வெள்ள பாதிப்பிற்கு மாநில அரசே காரணம் – எதிர்க்கட்சி தலைவர்

கேரளாவில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பிற்கு மாநில அரசே காரணம் என எதிர்கட்சித் தலைவர் சென்னிதாலா குற்றம்சாட்டி உள்ளார்.

கேரளாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முறையாக அணைகள் பராமரிக்கப்படாததாலும், மனித தவறு காரணமாகவே கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மின்துறை அமைச்சருக்கும், கேரள நீர்வளத்துறை அமைச்சர்களுக்கு ஒருங்கிணைப்பு இல்லாததே மோசமான நிலைக்கு காரணம் என அவர் குற்றம் சாட்டினார்.

சரியான கண்காணிப்பு, முன்னறிவிப்பின்றி அணைகளை திறந்து விட்டதாலேயே மக்கள் பெரிய பாதிப்பை எதிர்கொண்டதாக தெரிவித்த அவர், 1924ஐ விட தற்போது குறைவான அளவே மழை பெய்துள்ளது என்றார். ஒக்கி புயலில் இருந்தே பாடம் கற்க கேரள அரசு தவறி விட்டது என்று தெரிவித்த அவர், பேரிடர் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என அப்போதே முதல்வர் அறிவித்தார் எனவும், இப்போது வரை அவர் அலுவலகத்தில் அந்த கோப்பு நிலுவையிலேயே உள்ளது என்று கூறினார். இந்த பேரழிவு முழுக்க முழுக்க மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரிடர் என்று சென்னிதாலா தெரிவித்தார்.

Related Posts